Posts

Showing posts from June, 2009

கலாபன் கதை 1

குருவிக்கு ஒரு கூடு வேண்டும் : அது ஒரு 1974இன் ஆடி மாதத்து இரவு. செறிந்து விழுந்து கிடந்தது இருள். ஆனாலும் தலைநகரின் மின்வெளிச்சம் வானத்தை ஓர் ஒளிப்பரவலில் கிடத்தியிருந்தது. படுக்கையில் படுத்திருந்த கலாபன் உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான். பின் உறக்கம் வராதென்று உறுதியாக, எதையாவது அமைதியாகக் கிடந்து யோசிப்போம் என்ற முடிவோடு நிமிர்ந்து கிடந்தபடி தலையுயரத்தில் இருந்த வட்ட இரு கண்ணாடி ஜன்னல்களினூடு பார்வையை வெளியே எறிந்தான். வானம் தெரிந்தது. நிலா இல்லாத, நட்சத்திரங்களும் இல்லாத வானம். அவ்வப்போது ஒன்றிரண்டு நரைத்த முகில்கள் மிதந்தோடின அதில். பிறகு ஒரே வெளிர் நீலம். அதைப் பார்ப்பதுகூட அவனுக்கு வெகுநேரமாக அலுக்கவில்லை. பார்வை பரவெளியில் பதிந்திருந்தாலும் சிந்தனை அவ்வெளியினூடு சிறகடித்து வீடுநோக்கிப் பறந்துகொண்டிருந்தது. அவன் தனது இளமனைவியையும், குழந்தையையும் ஊரில் தனியே விட்டு வந்திருக்கின்றான். கொழும்பு வந்து பதினான்கு நாட்கள். உடலில் விளைந்திருந்த தாபம் அவனது மனைவியின் அருகை இச்சித்தது. அது ஒரு தகன மண்டபத் தகிப்பை அனுபவிக்கச் செய்துகொண்டிருந்தது. ஆனாலும் உள்ளம் உணர்ந்த காதலின்

அம்பை

 நவீன தமிழிலக்கியத்தில்  மிகவுயர்ந்து ஒலித்த பெண்ணியக் குரல் ஒரு விருது பற்றிய அறிவிப்புக்குப் பின்னால் அது குறித்த சலசலப்போ சர்ச்சையோ தவிர்க்க முடியாதபடி எழுந்தே வந்திருக்கிறது. எங்கேயும்தான்;. இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது இவ்வாண்டு அம்பைக்குக் கிடைத்திருப்பதான அறிவிப்பு வெளிவந்தபோது அபூர்வமாக அவ்வாறான சலப்பையோ சர்ச்சையையோ அவதானிக்க முடியவில்லை. நவீன தமிழிலக்கியத்தில் தெளிவுடன் மிகவுயர்ந்தொலித்த பெண்ணியக் குரலாக அவரது எழுத்துக்கள் (மற்றும் செயற்பாடுகளும்) ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாய் அந்த சலனமின்மையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். அம்பையை எனக்கு நேரில் பழக்கமில்லை. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சிறிதுகாலம் கடிதத் தொடர்பு கொண்டிருந்தது மட்டும்தான். அதுவும் நான் ‘இலக்கு’ சிற்றிதழை நடாத்திய காலத்தில் இதழ்கள் அனுப்பியதாலும், கட்டுரை கேட்டு கடிதம் எழுதியதிலும் ஏற்பட்ட தொடர்பே. மே 1996 இல் ‘இலக்கு’வின் ஆறாவது இதழ் தி.ஜானகிராமன் சிறப்பு மலராக வந்தது. நான் கேட்டதற்கு உறுதி அளித்திருந்தபடி அம்பை தி.ஜா.நினைவு மலருக்கு கட்டுரை அனுப்பியிருந்தார். ‘பசு,பால்,பெண்:தி.ஜானகிராமனின