தமிழ் நாவல் இலக்கியம்

தமிழ் நாவல் இலக்கியம்



தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வரலாற்றின் மிகவிரிந்த பரப்பை, ஒரு உரைக்கட்டில் அமைக்கும் மிகவும் அசாதாரணமான ஒரு முயற்சியை மேற்கொண்டிருப்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். இவ்வுரைக்கட்டைப் பூரணமானதாக்க நான் முயன்றிருக்கிற பொழுதிலேயே, சில அம்சங்களின் விரிவை அல்லது விளக்கத்தை நான் தவிர்த்த செயலும் நடந்திருக்கிறது. தகவல்களையன்றி, போக்குகளுக்கு நான் அழுத்தம் கொடுத்ததின் விளைவு இது.

இவ்வுரைக்கட்டு அல்லது உரை உங்கள் மனத்தில் தமிழ் நாவல் குறித்த எதாவது சிந்தனையை  அல்லது விவாதத் தளத்துக்கான கேள்விகளை எழுப்புமானால் அதையே இந்த உரைக்கட்டின் வெற்றியாக நான் பாவித்துக்கொள்வேன். அந்த நோக்கத்தோடேயே இதுவும் பின்னப்பட்டிருக்கிறது என்பதையும் நான் சொல்லியாகவேண்டும்.

அதனால்தான் பல்கலை நிறுவனங்கள் சார்ந்த ஆய்வுமுறைப் போக்கிலன்றி ஒரு தீவிர வாசகனின் பார்வையில் ஆய்வுமுறைகளை மறுத்தும், சில ஆய்வு முடிவுகளை மறுதலித்தும் இவ்வுரைக்கட்டு அமைய நேர்ந்திருக்கிறது.

பல்கலைக் கழகங்கள்மீது எனக்குக் கோபமொன்றுமில்லை. அவற்றின் பிரமிக்கவைக்கும் தோற்றங்களுக்கு அப்பால் மேற்கு நாடுகளில், குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளில், அவற்றினிடையே 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டில் உருவான புதிய புதிய சிந்தனைப் போக்குகளால் எனக்கு மரியாதைகூட உண்டு.  ரோலன் பார்த் மற்றும் ஜூலியா கிறித்தோவா இருவரும் இலக்கியத்துறையையும், ழாக் தெரிதாவும், மிஷேல் பூக்கோவும் தத்துவத்துறையையும், ழாக் லக்கான் உளவியல் துறையையும்  சார்ந்தவர்கள். அவர்களது துறைகள் அவர்களது அமைப்பியல், பின்அமைப்பியல் சார்ந்த சிந்தனை வெளிப்பாட்டினால் மரியாதை பெற்றன.

கீழ்த் திசையின் பல்கலைக்கழக நிறுவனங்களில் இதுபோன்ற பெரும் சாதனைகள் நிகழ்ந்ததாகச் சொல்லமுடியாது. அதனளவில் மார்க்சீயம் சார்ந்த விமர்சனப் போக்குகள் மூலம் கலாநிதிகள் க.கைலாசபதி மற்றும் கா.சிவத்தம்பி போன்றோர் வெளிப்படுத்திய ஆய்வு முறைகள் தமிழ்நாட்டுக்கே முன்னோடியாய்த் திகழ்ந்தன என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் இவ்வாறு ஏற்பட்ட அந்த பிரமிப்பும், மரியாதையும் பின்னாளில் தக்கவைக்கப்படவில்லை என்ற செய்தி இங்கே முக்கியமானது. பாடப்புத்தக ஒப்புவிப்பாக மட்டும் அவை இலங்கையிலும் இந்தியாவிலும் ஆகிவிட்டிருக்கின்றன. புறநடைகள் உண்டு. தமிழுலகில் சிந்தனை விரிவாக்கம் பல்கலைக்கழகங்களுக்கு அப்பாலேதான் உருவாகிக்கொண்டிருக்கிறது. இவ்விஷயம் குறித்து இவ்வுரைக்கட்டில் ஆங்காங்கே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

1.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தோன்றிய தமிழ் நாவல்களின் தோற்றத்தை ஏனைய இந்திய மொழிகளின் நாவல்களது தோற்ற நியாயங்களோடு நாம் ஒப்பாக வைத்துப் பேச முடியும். இந்திய நாவல்களின் தோற்றத்துக்கு அவற்றின் ஏனைய ஐரோப்பிய மொழிகளுடனான ஊடாட்டத்தை முதன்மைக் காரணமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கூறுவர். இந்தியக் கலாச்சாரத்தில் ஒவ்வொரு புதுப்பண்பாட்டுத் தாக்கம் ஏற்படும்போதும் அது மொழி மூலமாகவே ஏற்பட்டிருப்பது இந்திய வரலாற்றைப் பார்க்கும்போது தெரியவரும். இது முக்கியமான வி~யம். மத்திய காலத்தில் இஸ்லாமியர்கள் வந்தபோது இந்தியாவில் அதுவரையில் இல்லாத சரித்திரம் எழுதும் கலையையும் கொண்டுவந்தார்கள். இக் கலாச்சாரப் பரிவர்;த்தனை இந்தியக் கலைகளின் உருமாற்ற வளர்ச்சியை விரைவுபடுத்தியது. முக்கியமாக இலக்கியம் இதன் மூலம் வளம் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் நிகழ்ந்த ஆங்கிலக் கல்வி வளர்ச்சியும் பலவாறான சமூக, அரசியல், சிந்தனை வளர்ச்சிகளில் மாற்றங்களில் விரைவினை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் இந்த வளர்ச்சியை ஒருபுள்ளியில் வைத்துக் காணமுடியும். 1798 முதல் 1832வரை ஆட்சி அதிகாரத்தை ஆங்கிலேயர்களிடம் கொடுத்துவிட்டு பெயரளவில் மன்னராகவிருந்த சரபோஜி மகாராஜாவின் காலம்தான் இது. மன்னர் தன் காதலியின் நினைவாய் உருவாக்கிய பள்ளிதான் அப்போது ஆசியாவிலேயே பிரபலமாக இருந்த ஒரத்தநாடு அல்லது முக்தாம்பாள்புரம் பள்ளி. இங்கே  ஆங்கிலம், பர்சி, உருது, தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இவரது மறக்கமுடியாத இன்னொரு பணி சரஸ்வதி மஹால்.

இங்கே ஓலைச் சுவடிகள் மட்டுமின்றி, புதிதாக வெளியாகும் ஆங்கில நூல்களும், பிரெஞ்சு, இத்தாலிய, ஜேர்மன் மொழி நூல்களும் அந்தந்த நாடுகளிலிருந்து வருவிக்கப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டன. இவையெல்லாம் தஞ்சை என்கிற ஒரு சிறிய ஊரில் நடந்திருப்பினும், ஏறக்குறைய இதேயளவான மாற்றம் தமிழ்நாடு பூராவும், இந்;தியா பூராவும், நடைபெற்றதாகக் கொள்ள முடியும். பின்னால் ஏற்பட்ட இலக்கிய, கலாச்சாரப் புரட்சிக்கு இவை  மறுக்கமுடியாத பங்களிப்பை வழங்கின. பத்;தொன்பதாம் நூற்றாண்டை தமிழ் நாவல் இலக்கியத்தின் தோற்றத்துக்குத் தயாராக்கியதில் இந்த மாற்றமும் ஒன்று.

ஆங்கில மொழிக் கல்வி நிறைய ஆங்கில நூல்களின் இறக்குமதியை ஊக்குவித்தது. ஹென்றி பீல்டிங்கின் ‘ரொம் ஜோன்ஸ்’, ஒலிவர் கோல்ட் ஸ்மித்தின் ‘விக்கர் ஒப் தி வேக்பீல்ட்’ போன்றவையும், சர் வால்டர் ஸ்கொட்டின் சரித்திரப் புதினங்களும் நிறைய வாசிக்கப்பட்டன. சற்றுப் பின்னால் ஜேன் ஆஸ்டின், ஜோர்ஜ் எலியட் போன்றோரின் நாவல்கள் கவனம் பெறுகின்றன. இன்னும் சற்றுப் பின்னால் சார்ள்ஸ் டிக்கன்ஸ_ம், வில்லியம் தாக்கரேயும் இந்தியா வருகிறார்கள். இவற்றையெல்லாம் ஒட்டி எழுதுகிற வேகம் இந்திய மொழிகளில் நாவல்கள் எழுதும் முயற்சியை வெகுவாக உந்திவிடுகின்றது.

கவிதையில் எளிமை…எளிமையென்று பொதுமக்களுக்கான இலக்கியத்தை முன்னெடுத்த பாரதியும், வசனத்தில் எளிமையையும், விளக்கத்தையும் முன்னெடுத்த வீரமாமுனிவரும், ஆறுமுக நாவலரும் இக்காலகட்டத்தவர்களே. இவர்களால் முனையப்பட்ட துறைகளின் வளர்ச்சி, தமிழ் உரைநடையை நவீன இலக்கியத்துக்காகப் பதப்படுத்தி வைத்திருந்தது என்பது மிகையான கூற்றல்ல. பாரதியின் சிறுகதை முயற்சிகளை வைத்துப் பார்க்கிறபோது,‘சந்திரிகையின் கதை’யை அவனது நாவல் முயற்சியாகவே கொள்ள முடிகிறது. வ.வே.சு.ஐயரின் ‘ஒரு குளத்தங்கரை அரசமரம்’ சிறுகதைக்கும், சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலுக்கும்கூட உந்துவிசையாய் இது இருந்ததாய்க் கொள்ள முடியும். அத்தனைக்கு அந்த முற்றுப்பெறாத நவீனம் இருந்திருக்கிறது.

இந்திய மொழிகளைப் பொறுத்தவரையில் பங்கிம் சந்திரரின் ‘துர்கேச நந்தினி’ எனும் 1864இல் வெளிவந்த நாவலைத்தான் இந்தியாவின் முதல் நாவலாகக் குறிப்பிடுவர். தமிழின் முதல் நாவலின் தோற்றத்துக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்தது.  துர்க்கேச நந்தினி மட்டுமல்ல, பங்கிம் சந்திரரின் ஏனைய நாவல்களான ‘கபால குண்டலா’,‘வி~விருட்சம்’,‘ஆனந்த மடம்’ போன்றவையும் சர் வால்டர் ஸ்காட்டின் கதை கூறல் முறையை, கட்டுமான முறையைக் கொண்டிருந்திருக்கின்றன.

இத்தாலிய மான்சோனி பின்னாளில் சர் வால்டர் ஸ்காட்டைப் படித்து எப்படி எழுதக்கூடாதென்பதைக் கற்றுக்கொண்டேன் என்று கூறினார். அதுபோலவன்றி இந்திய நாவலாசிரியர்கள் சர் வால்டர் ஸ்காட்டை முழுமையாகச் சரணடைந்தனர். இந்தியத் தன்மைகளுடனான நாவல்கள் தோன்ற மேலும் சுமார் அரை நூற்றாண்டாக இந்தியா காத்திருக்கவேண்டிய அவலம் இங்கிருந்தே தோன்றியது என்பார் இலக்கிய விமர்சகர் க.நா.சு.
தமிழிலுள்ள நிலையைப் பார்க்கையிலும் இந்த உண்மையைப் புரியமுடியும்.


2..
அதற்கு முன்னராக, நாவல் என்கிற இலக்கிய வடிவம் எப்போது தோன்றியது என்ற கேள்விக்கான விடையைக் கண்டடைந்திருந்தாலும், ஏன் தோன்றியது என்ற கேள்விக்கு நாம் விடை கண்டாகவேண்டி இருக்கிறது. ஓர் இலக்கிய வடிவத்தை அதன் விசே~ம் கருதி ஒருவரால் அல்லது ஒரு குழுவினரால் உருவாக்கிவிட முடியாது. ஒரு சமூகத்தின் தேவை ஒரு குறிப்பிட்ட இலக்கிய வடிவத்தைக் கையாள்வதற்கு, புழங்குவதற்குத் தயாராக இல்லையேல் அது எத்தனை சிறந்த வடிவமாக இருப்பினும் காலத்தில் நிலைத்து நின்றுவிடாதென்பது சமுதாய விதியாகும்.  ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னரான சோழராட்சிக் காலத்தை காவிய காலம் என்று வரையறை செய்யும் தமிழிலக்கிய வரலாறு. காவிய காலம் மறைய உருவாகிய காலத்தை அது பிரபந்த காலமென்று சொல்லும். இந்த இலக்கிய வடிவ மாற்றத்தினை உருவாக்கிய சக்தி சமூக மாற்றமே என நிச்சய விடை தருகிறது மார்க்சீயப் பார்வை.

பெரு வலிது பெற்றிருந்த நிலமான்ய சமுதாயத்தின் வன்மை இழப்பும், மத்தியதர வர்க்கமொன்றின் தோற்றமுமே இலக்கிய வடிவ மாற்றத்தை உருவாக்கியதென்பார் கலாநிதி க.கைலாசபதி.

மாறாக,‘தத்துவம் நெறிகளை உருவாக்குவதில் வெற்றிகொண்டதன் விளைவாக காவியங்கள் உருவாயின. அவை அனுபவங்களைத் தொகுத்து தருக்க அடிப்படையில் நெறிகளை முன்வைத்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நெறிகளை மறுபரிசீலனை செய்யவும், நெறிகள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றின் சாத்தியங்களையும் தேவைகளையும்பற்றி யோசிக்கவும் தத்துவம் முன்கைகொடுத்தது. தத்துவத்தின் பணி மேலும் சிக்கலும் விரிவும் கொண்டதாக ஆயிற்று. இந்தக் காலகட்டம் இலக்கியத்தில் பிரதிபலித்ததின் விளைவாக மேலும் மேலும் பன்;முகத் தன்மையும் நெகிழ்த் தன்மையும்கொண்ட இலக்கிய வடிவம் ஒன்றின் அவசியம் எழுந்தது’ என்கிறார் திரு. ஜெயமோகன் தனது நாவல் என்கிற நூலில் (நாவல், பக்: 13).
தத்துவம் நெறிகளை உருவாக்குவதில் வெற்றிகொண்டதன் விளைவாகக் காவியங்கள் உருவாகின என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. தத்துவத்தின் பணி மேலும் சிக்கலும், விரிவும் கொண்டதாக ஆனதிலும், அதனால் மேலும் மேலும் பன்முகத் தன்மையும் நெகிழ்த் தன்மையும்கொண்ட இலக்கிய வடிவம் ஒன்றின் அவசியம் எழுந்தது என்ற கருத்திலும் எனக்கு உடன்பாடே. ஆனால் தத்துவம் நெறிகளை உருவாக்குவதில் வெற்றிகொண்டது எவ்வாறு என்ற கேள்விக்கு விடை அந்த வரிகளில் இல்லை.

அதனால் தத்துவத்தை வெற்றிகொள்ள வைத்த காரணத்தை அறிய நாம் கலாநிதி கைலாசபதியிடம்தான் வரவேண்டியிருக்கிறது.
அதன்படி நாம் அடைகிற பதில், கருத்து முதல் வாதத்துக்கு எதிரான பொருள்முதல்வாத அடிப்படையே காரணம் என்பதாக அமைகிறது. சிந்தனை முந்தியதென்றும் செயல் பிந்தியதென்றும் கூறும் கருத்துமுதல்வாதம். பொருள்முதல்வாதமோ செயல் முந்தியதென்றும் சிந்தனை பிந்தியதென்றும் வாதிக்கும். அப்பிள் பழம் நிலத்தில் விழுந்த செயல்பாடுதான் அதன் காரணத்தைச் சிந்தித்த ஐன்ஸ்டீனுக்கு புவி ஈர்ப்பை அறிய வைக்கிறது. அதன்படி சமுதாய மாற்றம் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியில் விளைய, அதன் மூலம் ஏற்படும் சமூக மாற்றம் இலக்கிய வடிவங்களிலும் மாற்றத்தை  விளைக்கிறது என்ற முடிவு விஞ்ஞானபூர்வமானதுதான்.

3..
மேலே நாவல்கள்பற்றிய ஆய்வுப் போக்குகள், விமர்சனங்கள்  குறித்த வி~யத்தில் சிறிது கவனம் செலுத்திவிட்டு தொடர்ந்து நகர்வது நல்லது என நினைக்கிறேன்.

க.கைலாசபதி, ஜெயமோகன், க.நா.சு., கோவை ஞானி ஆகிய இந் நால்வரும் இத் துறையில் கவனம் குவிக்கப்படவேண்டியவர்கள் ஆகிறார்கள். முன்னவர்கள் ஆய்வு அல்லது விமர்சனப் போக்குகளின் விதிமுறைகளை வகுத்தவர்கள் எனக் கொண்டால், அந்த விதிமுறைகளின்படி தமது ரசனையின் வழி நின்று நல்ல நாவல்களை இனங்கண்டு சொல்லியவர்களாக க.நா.சு.வையும், கோவை ஞானியையும் சொல்லமுடியும்.

தெளிவான இரண்டு போக்குகளின் பிரதிநிதிகள் இவர்கள். நிறுவன மயமாய் வளர்ந்து வந்த மார்க்சீய சிந்தனையின் வழி க.கைலாசபதி தனது விமர்சன முறையை முன்வைத்தவரென்றால், இந்த வழியின் இயங்கியல் தன்மையை மறுதலித்தும், மார்க்சீய விமர்சன முறையை மறுத்தும் ஜெயமோகன் தனது கருத்துக்களினை முன்வைத்ததாகக் கொள்ள முடியும். அதுபோல புதிய மார்க்சீயத்தைக் கட்டுருவாக்ககுவதில் பங்காற்றிய அந்தோனியோ கிராம்சியின் வழி  நாவல்களை கோவை ஞானி இனங்கண்டாரென்றால், இதை மறுதலித்த முறையில் தன் முடிவுகளை முன்வைத்தார் க.நா.சு. இருந்தாலும் முற்றுமுழுதாக இடதுசாரிகளின் படைப்புகளை அவர் நிராகரித்தார் என்றும் சொல்லிவிட முடியாது. கலாநிதிகள் கைலாசபதியும் சிவத்தம்பியும் முன்னிலைப்படுத்திய படைப்புகளையே அவர் பிரதானமாகவும் மறுதலித்தார் என்பதுதான் சரியான வரையறையாக இருக்க முடியும். கலை மக்களுக்கானது என்றதும், கலை கலைக்கானது என்றதுமான இரண்டு சிந்தனைப் பள்ளிகளின் பிரதிநிதிகள் இந்த நால்வரும் என்றாலும் பொருந்தும்.

க.கைலாசபதியும், கோவை ஞானியும் முதலாவது போக்கினது பிரதிநிதிகளென்றால், க.நா.சு.வும், ஜெயமோகனும் இரண்டாவது போக்கினுக்கு உரிய பிரதிநிதிகள் எனக் கொள்ளமுடியும்.
விமர்சனத் துறையில் இருந்த இந்த இரண்டு போக்குகள் போலவே, படைப்புத் துறையிலும் இரண்டு போக்குகள் தெளிவாக இருக்கவே செய்தன. படைப்புகள் குறித்து வருமிடத்தில் இதுபற்றி சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

இந்த இடத்தில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிட விரும்புகிறேன். மார்க்சீய விமர்சன முறை ஒன்று உண்டென்பதில் எனக்குள்ள உடன்பாடு, இந்த முறையின் மூலம் முன்னிலை படுத்தப்பட்ட படைப்புகள்மீது இல்லை. அதனால் க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியும் மேற்கொண்ட முறைகளில் எனக்கிருக்கும் அபிமானம், அவர்கள் முன்னிலை படுத்திய படைப்புகள்மீது நிச்சயமாக இல்லையென்பதை இந்த இடத்தில் நான் தெரிவித்தாக வேண்டும். ஒரு படைப்பு என்பது தன்னளவில் கலாபூர்வமான கட்டுமானங்களால் நிலைநிற்கிறது என்பதே  எனது நிலைப்பாடு.

4..
தமிழின் முதல் நாவலாக 1879இல் வெளிவந்த மயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் சொல்லப்படுகிறது. ( இந்நூல் எழுதப்பட்ட காலமாக 1876ம், வெளியிடப்பெற்ற காலமாக 1879ம் கைலாசபதியின் ‘தமிழ் நாவல் இலக்கியம்’, நா.சுப்பிரமணியனின் ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ ஆகிய பல்வேறு நூல்ககளில் குறிப்பிடப்பட்டுள்ளன.) பொதுமக்களுக்கு ரசமாகவும், போதனை நிறைந்ததாகவும் இருக்கவேண்டுமென்ற எண்ணத்தில் அந்த நாவலைத் தான் படைத்ததாக ஆசிரியரே தன் ஆங்கில முன்னுரையில் குறிப்பிடுவார்.

மட்டுமல்ல,‘இந்தச் சரித்திரத்திலே பிரஸ்தாபிக்கப்பட்ட பலரும் இந்த நிமி~ம்வரையில் ஒரு குறையும் இல்லாமல் சுகஜீவிகளாய் இருக்கிறார்கள். அப்படியே இதை வாசிக்கிறவர்கள் எல்லோரும் வச்சிர சரீரிகளாய் நித்திய மங்களமாய் வாழ்ந்திருக்கக் கடவார்கள்’ என்ற ஆசீர்வாதமும் இடம்பெற்றிருக்கும். ‘நாமும் கதையை முடித்தோம்ஷ இந்த நானில முற்றுநல் இன்பத்தில் வாழ்க’ என்று பாரதியும் தன் பாஞ்சாலி சபதத்தை இவ்வாறுதான் முடித்திருப்பான்.

இது தன் படைப்பின் முற்றுமுழுதான நோக்கத்தை படைப்பாளி வெளிப்படுத்தும் விதமாகக் கொள்ளலாம். மயூரம் வேதநாயகம்பிள்ளை பொதுமக்களைக் குறியாகக் கொண்டு நூல் யாத்த வேளையில், கல்வியறிவுபெற்ற கனவான்களைக் குறியாகக்கொண்டு ‘மனோன்மணியம்’ ஆசிரியர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை நூல் யாத்தார்.

உணர்ச்சிகளை படிப்படியாக ஏற்றி வெறும் கதைகூறலாய் தமிழ் நாவல் இலக்கியம் இந்த ரொமான்ரிய முறையிலேயே நீண்டகாலம் பயணித்தது. அப்போது அது வசன காவியம் என்றழைக்கப்பட்டது. கலாநிதி கைலாசபதிகூட,‘பிரதாபமுதலியார் சரித்திரம் தமிழ் உரைநடையில் தோன்றிய முதலாவது புதுமை நூல் ஆகவும் அமைந்துவிட்டது. எனவே வசன காவியம் என்று அதனை அழைத்தல் பொருந்தும்’ என்று கூறுவதைக் கவனிக்கவேண்டும். இந்த இடத்தில் அந்நூலை நாவலெனக் குறிப்பிடாமல், புதுமை நூலெனக் குறிப்பிடுகிறார் அவர். பிரதாப முதலியார் சரித்திரத்தின் பின்னால் வெளிவந்த ‘கமலாம்பாள் சரித்திரம்’,‘பத்மாவதி சரித்திரம்’ உட்பட பல்வேறு நாவல்களும் இந்தத் திசையிலேயே சென்றிருந்தன. அதற்கான வாசகத் தளத்தையே அதுவரையான ஆங்கிலக் கல்விமுறையும் உருவாக்கியிருந்தது.

5..
தமிழ்நாட்டில் நிலைமை இவ்வாறு இருந்தால்,ஈழ நாட்டில் அதன் முதலாவது தமிழ் நாவல்  ‘ஊசோன் பாலந்தை கதை’, பிரதாபமுதலியார் சரித்திரம் வெளிவந்து பன்னிரண்டு ஆண்டுகளின் பின் வெளிவந்தது எனத் தெரிகிறது.  இதை திருகோணமலை இன்னாசித்தம்பி 1891இல் எழுதினார். கலாநிதி க. கைலாசபதியின் இந்த முடிவுக்கு மாறாக கலாநிதி நா.சுப்பிரமணியன் 1885இல் சித்திலெவ்வை மரக்காரினால் எழுதி வெளியிடப்பட்ட ‘அசன்பேயுடைய கதை’யை ஈழத்து முதலாவது தமிழ் நாவலாகக் கொள்வார். இவை இரண்டையும் விடுத்து ஈழ மொழி வழக்குப் பிரஸ்தாபமும், எடுத்துக்கொண்ட நிலக்களனும் காரணமாக ‘வீரசிங்கள் அல்லது சன்மார்க்க ஜெயம்’ என்ற சி.வை.சின்னப்பபிள்ளையின் 1905இல் வெளிவந்த நூலைக்கூட முதலாவது என்று சொல்லலும் பொருத்தமானது. இவையெல்லாவற்றுக்கும் மாறாக 1856ஆம் ஆண்டில் வெளிவந்த ‘காவலப்பன் கதை’யே முதலாவது ஈழத்துத் தமிழ் நாவல் என்பாரும் உளர். இதுபற்றிய முடிவை ஆய்வுலகத்துக்கு விட்டுவிடுகிறேன்.

பிற்காலத்தில் முகிழ்த்த முற்போக்குக் காலகட்டத்தில் எழுந்த புனைகதைகளின் வீச்சுக் குறித்து சிறுகதையிலும், நாவலிலும் கவனம் குவிக்கவேண்டிய அவசியமொன்று ஈழம்வரையில் உண்டு. மற்றும்படி தமிழ் நாவலிலக்கியத்தில் மிக்க பாதிப்பை ஏற்படுத்திய நாவலாகச் சொல்வதற்கு நாம் தடுமாற்றம் கொள்ளவேண்டிய நிலைமையே எஞ்சிநிற்கிறது. கே.டானியலின் ‘கானல்’, மு.தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு’, அருள் சுப்பிரமணியத்தின் ‘அவர்களுக்கு வயது வந்துவிட்டது’, பாலமனோகரனின் ‘நிலக்கிளி’, வ.அ.ராஜரத்தினததின் ‘துறைக்காரன்’ போன்றனவற்றை, விமல் குழந்தைவேல், தேவகாந்தன், சோபாசக்தி முதலானவர்கள் புலம்பெயர் தமிழ்ப் படைப்பாளிகளாகக் கணிக்கப்படுகிறவரையில்,ஈழத்தின் சிறந்த நாவல்களாகக் கூறமுடியும்.

சிறுகதையில் இருந்த வளர்ச்சி இலங்கைத் தமிழ் நாவல்களைப் பொறுத்தவரையில் இருக்கவில்லையென்று குறிப்பாகச் சொல்லலாம்.
நந்தியின் ‘மலைக்கொழுந்து’, ஸி.வி.வேலுப்பிள்ளையின் ‘இனிப் படமாட்டேன்’, தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’, தி.ஞானசேகரனின் ‘குருதிமலை’ போன்றனவும் அதேயளவு முக்கியத்துவம் வாய்ந்தனவே. எஸ்.பொ.வின் ‘தீ’ நாவல் தனக்கென ஓரிடத்தை நாவலிலக்கிய வரலாற்றில் கொண்டிருக்காவிடினும் அது வெளிவந்த காலத்திலிருந்த பாதிப்பு முக்கியமானது. அது குறித்து எழுந்த விமர்சனங்கள் முக்கியமானவை. அதில் க.நா.சு., மு.த., பிரமிள் போன்ற பலர் கலந்துகொண்டிருந்தனர். எழுத்து சஞ்சிகையில் இவ்விவாதங்கள் இடம்பெற்றன. ஈழத்து ஆரம்ப நாவல்களைப் பொறுத்தவரை மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இதயம்’ நாவலுக்கு தனது ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் நூலிலே ஒரு முக்கியமான இடம் அளித்திருப்பார் கலாநிதி நா.சுப்பிரமணியன்.

இலங்கையின் வடபகுதியில் முற்போக்கிலக்கியம் சாதி முறைக்கெதிரான போராட்டத்தின் வெளிப்பாட்டினைக் கொண்டிருந்ததெனில், மலையகத்தில் அது தொழிற்சங்க உரிமையினதும், பாலியல் சுரண்டலினதும், வாழிடப் பிரச்சினையினதும் வெளிப்பாட்டைக் கொண்டிருந்ததாய் பொத்தம் பொதுவாகக் கூறமுடியும். இந்த வகையில் அங்கே தோன்றிய நாவல்கள் இச் சோகங்களின் வெளிப்பாட்டினை அதிகமும் கொண்டிருந்தன. ஆயினும் கனதியான நாவல் என்றவகைமையுள் அவை அடங்காது போய்விடுகின்றமை துர்ப்பாக்கியம்.

வெறும் யதார்த்தத்தின் பிரத்தியட்சம் மட்டும் கொண்ட நீண்ட கதை, நாவலாக ஆகிவிடுவதில்லை. நாவலின் பாத்திர வார்;ப்பும், அது விரிக்கும் சமூகக் களமும், தனிமனித மனநிலைகளின் விவரிப்பும், கதைகூறலின் புனைவும், அதற்கான மொழிநடையுமே ஒரு நூலை அது நாவலா இல்லையா எனத் தீர்மானிக்கிறது என்ற விமர்சன அடிப்படையில் இந்த முடிவையே நாம் வந்தடையவேண்டி உள்ளது.

இலங்கை தவிர்த்து, மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இலக்கிய முயற்சிகள் உள்ளன. சிறுகதையில் ஓரளவு அவற்றுக்கான பங்களிப்பு உளவெனினும், நாவலில் சொல்லும்படிக்கு மிக அதிகமில்லை. ரெ.சண்முகத்தின் ‘சயாம் மரண ரயிலில்’, அ.ரெங்கசாமியின் ‘லங்காட் நதிக்கரை’, ரெ.கார்த்திகேசுவின் ‘அந்திம காலம்’ போன்ற நாவல்கள்

6..
இலக்கிய வரலாற்றெழுத்தியல் பகுத்துள்ளபடி இந்திய அல்லது ஈழ நாவல்களின் தோற்ற காலத்தை ஐரோப்பியர் காலமெனக் கொள்ளலாம். ஐரோப்பிய காலம், நாவல்களின் தோற்றத்துக்கான களப் பணியைக் கச்சிதமாக முடித்திருப்பினும், சிந்தனை விரிவாக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. இந்தியா சுதந்திரம் பெறும்வரையில் தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சி அதற்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று.
சுதந்திரத்திற்குப் பிறகான தமிழ் நாவலின் வளர்ச்சி பெரும்பாலும் மேற்கு நாடுகளைச் சார்ந்தல்ல, இந்திய மொழிகளைச் சார்ந்தே அமைந்திருக்கிறது. குறிப்பாக வங்கத்திலிருந்தும், மராத்தி, உருது, இந்தி மொழிகளிலிருந்தும் பெருவாரியான மொழியாக்கங்கள் தமிழில் இடம் பெற்றன.

 வ.வே.சு.ஐயர்,கு.ப.ராஜகோபாலன், ஆர்.~ண்முகசுந்தரம் போன்றோர் வங்க மொழியிலிருந்து நிறையப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்தனர்.
ஆர்.~ண்முகசுந்தரத்தின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த விபூதிபூ~ன் பந்யோபாத்யாயவின் ‘பதேர் பாஞ்சாலி’யும், த.நா.குமாரசாமியின் மொழிபெயர்ப்பிலான தாராசங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்ய நிகேதன’மும் தமிழிலக்கிய உலகினை வலுவாகப் பாதித்தவை.

இந்த ஆரம்பம் பதிப்புத் துறையினதும், வாசகப் பரப்பினதும் அனுசரணையினால் வீச்சுப் பெற்றது.  மணிக்கொடிக் காத்துக்குப் பின்னால் இந்தத் துறை மகத்தான வளர்ச்சிபெற்றது. கா.ஸ்ரீ.ஸ்ரீ.யினால் மராத்திய எழுத்தாளர் வி.ஸ.காண்டேகரின் சிறுகதைகளும் நாவல்களும் பெருவாரியாக மொழிபெயர்க்கப்பட்டன. த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, மற்றும் அ.கி.ஜெயராமன் போன்றோரால் வங்கப் படைப்புகள் மொழிமாற்றமாயின. இது தமிழ் நாவலின் வளர்ச்சிப் போக்கைத் திட்டமாக மாற்ற உதவியது. அதுபோல சோவியத்திலிருந்து மார்க்சீம் கார்க்கியும், பு~;கினும், டால்ஸ்டாயும், கோகலும், அன்ரன்; செகாவும்  மொழிபெயர்ப்பாகி வந்ததிலான தாக்கமும் தமிழில் நிறைய நிகழ்ந்திருக்கிறது. சிதம்பர ரகுநாதன் மொழிபெயர்த்த மார்க்சீம் கார்க்கியின் ‘தாய்’ நிறைந்த பாதிப்பைச் செய்ததாய்ச் சொல்லப்படுகிறது. தமிழுக்கு நிகழ்ந்த பிரேம் சந்த்தின் படைப்புகளது அறிமுகமும் முக்கியமானது. ஹிந்தியிலும் உருதுவிலும் முதல் நாவலாசிரியராகக் கணிக்கப்படும் பிரேம் சந்த், இடதுசாரிச் சிந்தனையாளர். இவரது படைப்புக்களில்,‘பிரச்சார நோக்கம் இருந்தாலும்கூட, அவர் கதைகளும், நாவல்களும் இலக்கியத் தரம் அமைந்து விளங்கியது ஒரு சிறப்பு’ என்கிறார் இலக்;கிய விமர்சகர் க.நா.சு.

இந்த இடத்தில் ஈழத்தில் நிகழ்ந்த மொழிபெயர்ப்புகளையும் நாம் நினைவுகொள்ளவேண்டும். ஏறக்குறைய இருபது மொழிபெயர்ப்பாக்கங்கள் இக் காலப்பகுதியில் வெளிவந்ததாகத் தெரிவிக்கிறார் கலாநிதி நா.சுப்பிரமணியன் தனது ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற நூலிலே. இவான் துர்க்கனேவ்’வின் நாவலென்று இலங்கையர்கோனால் மொழிபெயர்க்கப்பட்டு ‘முதற்காதல்’ என்ற பெயரில் வெளிவந்தது. இவானின் இன்னொரு நாவல் ‘மாலைவேளையில்’ என்ற தலைப்பில் சி.வைத்தியலிங்கத்தினால் மொழிபெயர்ப்பானது. ரொபேர்ட் லூயி ஸ்ரீவன்ஸனின் ஒரு நாவல் ‘மணிபல்லவம்’ என்னும் தலைப்பில் யாழழ்ப்பாணம் தேவனினால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எமிலி ஜோலாவின் நாநா நாவல் அ.ந.கந்தசாமியினால் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றை முக்கியமாகக் கருதுகிறேன்.

தமிழில் முற்போக்கு இலக்கியத்தை, இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் யதார்த்தவாத எழுத்துமுறையை, வளர்த்தெடுத்ததில் இத்தகைய மொழிபெயர்ப்புகளுக்குப் பெரும்பங்குண்டு.
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலிருந்தே கம்யூனிச சிந்தனையும், இயக்கச் செயற்பாடும் இந்தியாவில் ஏற்பட்டிருப்பினும் இந்திய சுதந்திரத்தின் பின்னரே முற்போக்கு வாத சிந்தனை இலக்கியத்தில் வீச்சுப் பெற்றது எனல் வேண்டும்.


7..
இது முதல்கொண்டு தமிழ் நாவல் இலக்கியத்தின் போக்கினை மூன்றாக என்னால் வகுக்க முடிகிறது. முதலாவது, பொதுமக்கள் இலக்கியம். இது வணிகத்தனமாக விரிகிறது. இரண்டாவது, சிற்றிதழ்களின் தோற்றமும் தீவிர இலக்கிய முயற்சிகளும். குறிப்பாக,‘எழுத்’தின் வருகை. இது விமர்சன முறையை முன்னெடுத்ததோடு புதுக்கவிதைக்கான வாசலைத் திறந்தும் விட்டது. மூன்றாவது, முற்போக்கு இலக்கியம். இதை இடதுசாரி இலக்கியம் எனலும் பொருந்தும். இதன் பெருவழக்கிழப்பு பின்னால் தலித் இலக்கியம் பெருக வாய்ப்பானது.

இந்த மூன்று வகையான இலக்கியப் பிரிவுகளும் அண்ணளவாக 1975வரை எதுவித தடுமாற்றமுமின்றி வளர்ந்தன. அதனதன் சிந்தனையைத் திசைமாற்றும் எதுவிதமான பாரிய சமூக மாற்றமும் இக்காலம் வரையில் நிகழவில்லை என்கிறது இலக்கிய விமர்சன உலகம்.
முதலாவது வகையினரில் கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், கோவி மணிசேகரன், ஜெகசிற்பியன் போன்றோரின் எழுத்துக்கள் தொடர்கதைகளாக சஞ்சிகைகளில் வெளிவந்த காலம் இதுதான். கல்கி, சாண்டில்யனின் சரித்திரக் கதைகள் அசாதாரண இயற்கை நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் hளைவழசiஉயட சழஅயnஉந என்கிற வகைப்பாட்டுக்குள் அடங்குவன. இவற்றை சாதாரண இயற்கை நிகழ்ச்சிகளோடு பொருந்தியதான hளைவழசiஉயட ழெஎநட என்ற வகைமைக்குள் அடக்கிவிட முடியாது. தமிழில் இதற்கு முன்னுதாரணம் ஆகக்கூடிய நாவல் அரு.ராமநாதன் எழுதிய ‘பாண்டியன் மனைவி’ மட்டுமே. ஆயினும் இவ்வகை எழுத்து லட்சக்கணக்கான வாசகப் பெரும்பரப்பைக் கொண்டிருந்தது. கல்கி, கலைமகள், அமுதசுரபி, ஆனந்த விகடன், குமுதம் ஆகிய சஞ்சிகைகள் இவற்றின் வெளியீட்டுக் களங்களாயிருந்தன. மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்களில் நா.பா.வின் மணிபல்லவமும், பாண்டிமாதேவியும் சற்று வித்தியாசப்பட்ட அமைப்பும், நடையும் கொண்டன. இவற்றினுள்ளும் மணிபல்லவம்மீது எனக்கு பற்றும் உண்டு. என் ஆரம்பகால வாசிப்புகளில் என்னை ஒரு திசைமாற்றும் கருவியாக அது செயற்பட்டது என்பது அதன் முதன்மைக் காரணம்.

ஆரணி குப்புசாமி முதலியாரின் எழுத்தின் தொடர்ச்சியாக இவர்களதைக் கொள்ளலாம்.

அடுத்த இலக்கிய வகைமையும் சஞ்சிகை சார்ந்தே தொடங்குகிறது. தீவிர இதழ்கள் அல்லது சிற்றிதழ்கள் என இவற்றைக் கூறலாம். எழுத்து, சூறாவளி, சந்திரோதயம் போன்றவை இக்காலகட்டத்தின. இவற்றின் பாதிப்பு பல எழுத்தாளர்களிடமும் இருந்தது. ‘நாகம்மாள்’ தந்த ஆர்.~ண்முகசுந்தரம்,
‘நித்திய கன்னி’,‘காதுகள்’ ஆகிய நாவல்களைத் தந்த எம்.வி.வெங்கட்ராம்,‘வாடிவாசல்’ எழுதிய சி.சு.செல்லப்பா,‘ஒருநாள்’,‘பொய்த் தேவு’ ஆகிய நாவல்களைப் படைத்த க.நா.சு. போன்றோரையும் ‘புயலிலே ஒரு தோணி’,‘கடலுக்கு அப்பால்’ ஆகிய நாவல்களின் படைப்பாளி ப.சிங்காரம்,‘மோகமுள்’,‘மரப்பசு’,‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களைத் தந்த தி.ஜானகிராமன்,‘பதினெட்டாம் அட்சக்கோடு’, மற்றும் ‘தண்ணீர்’ ஆகிய நாவல்களைத் தந்த அசோகமித்திரன்,‘குறத்தி முடுக்கு’,‘நாளை மற்றுமொரு நாளே’ தந்த ஜி.நாகராஜன்,‘மாயமான் வேட்டை’ மற்றும் ‘குருதிப்புனல்’ தந்த இந்திரா பார்த்தசாரதி,‘கரிப்பு மணிகள்’ மற்றும் ‘பாதையில் பதிந்த அடிகள்’ படைத்த ராஜம் கிரு~;ணன்,‘கடல்புரத்தில்’ தந்த வண்ணநிலவன்,‘பள்ளிகொண்டபுரம்’ படைத்த நீலபத்மநாதன் போன்றோர் இவ்வகையினருள் முக்கியமானவர்கள்.

மூன்றாம் வகைமைக்குள் தமிழ் நாவல் உலகின் மிக முக்கியமான படைப்பாளிகள் அடங்குவர். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்றோர் ஆரம்பத்தில் முற்போக்கு அணி எழுத்தாளர்களாகவே இனங்காணப்பட்டார்கள். இவர்களது அணிமாற்றம் பின்னாலேதான் நிகழ்ந்தது.

சு.சமுத்திரம், டி.செல்வராஜ், கந்தர்வன், பொன்னீலன், சிதம்பர ரகுநாதன் ஆகியோர் முக்கியமானவர்கள். சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’யும், சிதம்பர ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ முக்கியமான நாவல்கள். ‘வாடா மல்லி’ பாலினப் பிரச்சினைபற்றிப் பேசும் முக்கியமான தமிழ் நாவல். அதேபோல் ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி நாவலாகக் கூடியது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியின் முன்னால் இன்னும் சிலரின் விகசிப்பு உண்டு. இதை நாம் விளங்கிக்கொள்ள அமைப்பியலிலிருந்து பின்நவீனத்துவம் வரையில் அலசியாக வேண்டும். இந்தியப் பொருளியல் மாற்றமும்  வேறுவிதத்தில் தன்னை வடிவமைத்தமை இந்த மாற்றங்களைத் துரிதப்படுத்தியது.

உற்பத்தி முறையும், சமூக நிலைமையும் இன்னும் நிலப்பிரபுத்துவப் பிடி முற்றாக நீங்கிவிடாத நாடாகவே இந்தியா இருந்துவந்திருக்கிறது. தொழிற்சாலைகளும் முதலாளிகளும் தோன்றியிருப்பினும் அரசின் இறுக்கம் வலுவாக இருந்து முதலாளித்துவ முறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. என்றைக்கு இந்திய பொருளாதார அமைப்பு தனது மடியில் சர்வதேச முதலீட்டுக்கான வாசலைத் திறந்துவிட்டதோ, அன்றைக்கு அது பிரமிக்கத் தக்க மாற்றங்களைக் காணத் தொடங்கிவிட்டது. சோவியத்தின் உடைவு இந்தியாவின் தங்குதடையற்ற முதலாளித்துவப் போக்கினுக்கு உதவுமுகமாகவே இருந்தது. இத்தகைய பொருளியல் மாற்றத்தினூடாக தொலைக்காட்சியும், கணினியும் உள்நுழைகின்றன. திறந்தவெளிப் பொருளாதாரமாக ஆரம்பித்தது, திறந்தவெளிச் சிந்தனையைத் தருகிறது. பதிப்பகங்கள் பெருமாற்றம் காண்கின்றன. மேற்குலகச் சிந்தனையின் உள்நுழைவு சிற்றிதழ்களின் வடிவில் வாசகப் பரப்பை அடைந்தன. அமைப்புமையவாதமும், பின்;அமைப்பியலும், பின்நவீனத்துவமும் வாசகப் பரப்பைப்போலவே படைப்புலகையும் அணுகுகிறது. இவ்வாறு மேற்குலகச் சிந்தனை பரவியிருப்பினும், உள்ளுலகச் சிந்தனையான தலித்தியம் மகரா~;டிரத்திலிருந்து தெலுங்குக்கும், பின்னால் தமிழுக்கும் பரவுகிறது. அம்பேத்கரின் நூற்றாண்டு விழா தலித்தியத்தை பேரெழுச்சியோடு தமிழில் நிலைநாட்டுகிறது.

8..
இதிலிருந்து தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றை தசாப்தங்களாகப் பிரித்துக் காணவேண்டிய தேவை இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இந்த இரண்டு இறுதிச் சகாப்தங்களும் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் முக்கியமானவை. எட்டாம் தசாப்தம்தான் இன்றைய தமிழ் நாவல் இலக்கியத்தின் பாதையைச் செப்பனிட்டுத் தந்தது என்பது மிகையான கூற்றல்ல.

இந்த மாற்றத்துக்கான சமூக விதி, முதலாளித்துவம் மேலும் மேலும் இறுக்கமாக வளர்ந்துவரும் நிலையை செம்மையாகச் சொல்லிநிற்கிறது. கணினியின் வளர்ச்சி அறிவியக்கத்தின் ஊற்றாக இன்று மாறி வளர்ந்து நிற்கிறது.

குறியியலினதும், அமைப்புமையவாதத்தினதும், பின்அமைப்பியலினதும், பின்நவீனத்துவத்தினதும் வளர்ச்சி இந்த வளர்ந்துவரும் முதலாளித்துவத்திற்கான போர்க்கொடி என்பது நம்ப மறுக்கிற சேதியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. பதிப்பகங்களதும், முறைசார் கல்வி நெறியினதும் அமைப்புக்கு எதிரான கலகக்குரலாகவே பின்நவீனத்துவம் எழுச்சி பெற்றதென்பது மேற்குலக வரலாறு. நிறுவனமயப்பட்ட அமைப்புகளை திரஸ்கரிக்கும் முயற்சியே பின்நவீனத்துவத்தின் ஆரம்பமாகச் சொல்லப்படுகிறது.

கார்ல் ஆந்த்ரேவின் ‘சமனி 8’ என்ற செவ்வகமான செங்கல் அடுக்கு ஒன்று லண்டனில் உள்ள டேட் கலைக்கூடத்தில் 1976ஆம் ஆண்டு காட்சிக்கு வைக்கப்பட்டதிலிருந்து இந்தப் புள்ளியை நாம் இட்டுக்கொள்ளலாம். இது உணர்ச்சி பாவம் எதுமற்ற வெறும் கற்குவியல் என்பாரும், இது கொண்டிருக்கக்கூடிய அர்த்தங்களை மதிப்பீடு செய்வோருமாக இது சர்ச்சையை மட்டுமல்ல, சிந்தனையையும் கிளர்த்தியது.
இதில் நாம் கண்டடையவேண்டிய உண்மை எதுவெனில் கலைக்கூடத்தின் தன்மை மாற்றப்படுகிறது என்பதுதான். ‘ஒரு படைப்பை மெய்யான கலைப்படைப்பு என்று ஆக்குவது எல்லாவற்றையும் விட கலைக்கூடம் என்ற நிறுவனம்தான்’ என்று பின்நவீனத்துவம் சொல்கிறது. மட்டுமன்;றி,கார்ல் ஆந்த்ரேவின் செங்கல் அடுக்கு, ரொட்டினுடைய முத்தம் சிலைபோல உணர்ச்சியைத் தருவதாக இல்லையெனின், முன்னர் கலையின்பம் என நாம் கொண்டிருந்ததின் அளவுகோல்கள் தவறானவையெனவும் அது சொல்கிறது. சிந்தனையுலகம் சார்ந்த ஒரு குழுவாக பின்நவீனத்துவம் செயல்பட்டிருப்பினும், அது வலதுசாரித் தன்மையைவிட இடதுசாரித் தன்மை கொண்டதுதான் என்கிறார் கிறிஸ்தோபர் பட்லர் பின்நவீனத்துவம் குறித்துக் கூறுகையில்.

இவ்வாறான சிந்தனைமுறை தமிழுக்கு அறிமுகமானது சிறுபத்திரிகைகள் மூலமாகத்தான்.

இவ்வாறு பெருங்கதையாடல்களின் முடிவை முன்மொழிந்த பின்நவீனத்துவத்தின் தமிழுலக அறிதலுக்குப் பின்னர் எண்பதுகளில் தமிழிலக்கிய உலகில் நிகழ்ந்திருந்த மாற்றத்தை நாம் இவ்வாறு காணலாம். வணிக எழுத்துக்கும் யதார்த்தவகை எழுத்துக்கும் விலகி, கதையையும், கதை சொல்லும் முறையையும், அதற்கான புது மொழியையும் கண்டடைதல் நிகழ்ந்திருந்தது. தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’, சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்சியலிசமும் பேன்சி பெனியனும்’ போன்ற நாவல்களின் வருகை இதையே அறிவிக்கிறது. தொண்ணூறுகள் இன்னும் முக்கியமானவை. ‘அத்திலாந்திக் மனிதனும் ஒரு கோப்பை தேநீரும்’ தந்த எம்.ஜி.சுரேஸ்,‘பாழி’ நாவல் தந்த கோணங்கி ஆகியோரின் வருகை இன்னும் தமிழ் நாவலிலக்கியத்தின் பாதையைச் செப்பனிடுகிறது. சிறுகதைகள் மூலம் இதற்கான பங்களிப்பைச் செய்தவர்களாக பிரேம்-ரமே~; ஆகியோரைக் குறிப்பிடலாம்.

புதிய பார்வையில், பின்நவீனத்துவத்தினை ஒத்துக்கொள்ளாதவர்களாக இருந்தாலும், தமிழில் முக்கியமான நாவல்களைத் தந்தவர்களில் ஜெயமோகன், எஸ்.ராமகிரு~;ணன் இருவரும் முக்கியமானவர்கள். இவர்களோடு சாரு நிவேதிதாவையும் சேர்த்துக்கொள்ள முடியும். யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ முக்கியமான வருகை.
இக் காலகட்டத்தில் தமிழ் நாவல் இலக்கியத்தில் நிகழ்ந்த இன்னுமொரு அம்சம் பெருநாவல்களின் தோற்றம்.

ஜெயமோகனின் ‘வி~;ணுபுரம்’, மற்றும் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ போன்றவையும், மூன்று பாகங்களாய் வெளிவந்த ஜோதிர்லதா கிரிஜாவின் ‘மணிக்கொடி’யும், இரண்டு பாகங்களாய் வெளிவந்த சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாக’மும், தேவகாந்தனின் ஐந்து பாகங்களாய் சுமார் 1400 பக்கங்களில் வெளிவந்த ‘கனவுச் சிறை’யும் குறிப்பிடப்படவேண்டியவை. பெரும் வாசகத் தளத்தின் ஆதர்~ம் இருந்ததே இவற்றின் தோற்றப்பாட்டைச் சாத்தியமாக்கியதெனினும் தமிழ் நாவலிலக்கியம் இன்னொரு மகா பாய்ச்சலை நடத்திக்காட்ட இந்தக் கட்டத்தில் முயற்சி செய்தது என்ற உண்மையையும் நாம் உணரவெண்டும்.

வணிக எழுத்து இக்காலகட்டத்தில் பெருவளர்ச்சி பெற்றிருந்தது. இதற்கான இருபெரு அடையாளங்கள் சுஜாதாவும், பாலகுமாரனும். இவர்கள் காலத்தைச் சேர்ந்த இந்துமதியும், வாஸந்தியும், சிவசங்கரியும்கூட இந்த பகுப்பினுள் வரக்கூடியவர்களே. சுஜாதா ஓரளவேனும் சிறுகதை மூலமாக தன் இலக்கியப் பங்களிப்பைச் செய்தார் என்கிறார்கள் சில விமசகர்கள்.
பெண்ணிய எழுத்தும், தலித் இலக்கியமும் இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களுக்கு உரியவையே.

வை.மு.கோதைநாயகி அம்மாளிலிருந்து லட்சுமி ஊடாக இந்துமதி ஆதியாய பெண் படைப்பாளிகள்வரை தமிழ் நாவல் வரலாற்றில் பெண் எழுத்து தொடர்ந்திருந்தாலும், பெண்ணிய எழுத்தாக நிமிர்ந்து வெளிவந்த எழுத்தென பாமாவினது ‘கருக்கு’ மற்றும் ‘சங்கதி’ ஆகியனவும், சிவகாமியின் ‘ஆனந்தாயி’யும்  கருதத் தக்கன.

ராஜம் கிரு~;ணன் பெண் படைப்பாளியாக இருந்தபோதிலும், அவரது எழுத்துக்கள் பொது இலக்கிய வகைமையுள் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவையே. ‘பாதையில் பதிந்த சுவடுகள்’ அவரது முக்கியமான படைப்பு.

பிற மொழிகளிலிருந்தான மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் இலக்கியம் அடைந்த நன்மைகள் தனியாகப் பார்க்கப்பட வேண்டியவை. தமிழ் நாவலுக்கான அவற்றின் பங்களிப்பு இங்கே தனியாகப் பார்க்கப்பட இருக்கிறது. ஆயினும் தலித் இலக்கியம் என வருகையில் அவற்றினை மேம்போக்காகவேனும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

முக்கியமான படைப்புக்கள் மராத்தியிலிருந்தும், கன்னடத்திலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டன. லட்சுமண் மானேவின் ‘உபாரா’, லட்சுமண் கெய்க்வாட்டின் ‘உச்சாலியா’, கிN~hர் சாந்தாபாயின் ‘குலாத்தி’ ஆகியன மராத்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன. சித்தலிங்கையாவின் ‘ஊரும் சேரியும்’, அரவிந்த மாளகத்தியின் ‘கவர்மென்ட் பிராமணன்’, தேவனூரு மகாதேவாவின் ‘பசித்தவர்கள்’ ஆகியன கன்னடத்திலிருந்து மொழிபெயர்ப்பாகின. இவை தமிழ் தலித் இலக்கியத்துக்கான உந்துவிசையை அளித்தன. இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’, தேவபாரதியின் ‘பலி’ ஆகியன தலித் இலக்கியமாகக் கருதப்பட்டபோதும், தலித்தியக்கத்திற்கு அனுசரணை செய்யாதவை என்ற குறை இருக்கிறது. மற்றும்படி குணசேகரனின் ‘வடு’, ராஜ் கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’ போன்றவை தலித்திய நாவல்களாக நின்று நிலைத்திருக்கின்றன.

9..
இருபத்தோராம் நூற்றாண்டு மிக்க பிரகாசத்தோடு பிறந்தது எனல்வேண்டும். தனிமனித முயற்சிகளாக இலக்கியம் இக்காலகட்டத்தில் பரிணமித்தது என்றாலும் மிகையில்லை. தமிழவன், எஸ்.வி.ராஜதுரை, பிரேம்-ரமே~;, அ.மார்க்ஸ், அறுபதுகளிலிருந்து இலக்கியக் களத்தில் நிற்கும் வெங்கட் சாமிநாதன் ஆகியோர் விமர்சன ரீதியாக தமிழ் நாவல் இலக்கியம் வளர தம் பங்களிப்பினைச் செய்தார்கள். இன்னும் அவர்களது பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் இருந்த பொதுப்படையான இரண்டு போக்குகள் இன்று பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்டன என்றே சொல்லக்கிடக்கிறது. தலித்திலக்கியம், பெண்ணிய எழுத்து என்பனவெல்லாம்கூட ஒரு வசதிக்கான பகுப்பாகவே இருக்கின்றன தவிர, அவற்றின் தீவிரம் தனியே இலக்கியத் தீவிரமாக மாற்றமடைந்திருப்பதை நான் கவனித்து வருகிறேன்.
இந்த மாற்றங்களுக்கான விசேட சமூகக் காரணங்களென்று எதுவும் இல்லாவிட்டாலும், தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரணங்கள் முண்டுகொடுத்துக்கொண்டிருப்பதைக் குறிப்பிட வேண்டும்.
தமிழ் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சிக் காலகட்டத்தில் பத்திரிகைத்துறையின் வலுவான பிடி இருந்தமைபோல், இன்று பதிப்பகத்தின் ஆதிக்கம் அதன்மீது பதிந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. அது ஒருவகையில் வளர்ச்சிக்கான ஒரு பங்களிப்பையும் செய்கிறது என்பதும் உண்மையே. ஒரு படைப்பை நாவலா, குறுநாவலா எனத் தீர்மானிக்கிற அளவுக்கான அவற்றின் ஆதிபத்தியம் தீமையானது எனக் கொண்டாலும், நன்மையான பங்களிப்பைக் கருத்தில்கொண்டு அவற்றின் இருப்பை நாம் அங்கீகரித்தே ஆகவேண்டியிருக்கிறது. தமிழினியும், உயிர்மையும், காலச்சுவடும் தரமான பல நாவல்களை வெளியிட்டிருப்பதை மறுக்க முடியாது.

இ-புத்தக வெளியீடுகள் மெதுமெதுவாக வெகுத்து வருகின்றன. எழுத்துக்களைக் கோர்த்து அச்சடித்த ஆரம்ப கால முறையிலிருந்து இது அசாதாரணமான வளர்ச்சிதான். இதுவே பதிப்பகத்தின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கான கருவியாகத் தொழிற்படவும் முடியும். எல்லாவற்றிற்கும் காலத்தின் பதில் முக்கியமானது. அதைக் காத்திருப்போம்.
இக்காலகட்டத்தில் வெளிவந்த நாவல்களில் குறிப்பாக எஸ்.ராமகிரு~;ணனின் ‘உபபாண்டவம்’, மற்றும் ‘யாமம்’, பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’, சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ ஆதியன முக்கியமான படைப்புக்கள்.

சென்ற தசாப்பதத்தில் வெளிவந்த நாவல்களைக் குறிப்பிட முடிவதுபோல், இந்த தசாப்பதத்தில் வெளிவரும் நாவல்கள் பற்றி இனிமேலேதான் பகுத்துணர முடியும்.

இந்தத் தலைப்பிலான வி~யத்தை நிறைவு செய்வதன் முன்னால் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

வாழ்க்கை ஒவ்வொருவரின் நேரத்தையும் தயவுதாட்சண்யமின்றி விழுங்கிக்கொண்டிருக்கிறது. எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர தூக்கம் என்ற அம்சம் அறவே இல்லாது போய்விட்டது. இன்று ஒரு தொழிற்சாலைக் கூலியே தன்னை ஒரு தொழிலாளியாக மேற்குலகில் நினைத்துக்கொள்வதில்லை. அத்தனைக்கு வாழ்முறை மாற்றம் பெருமளவு நிகழ்ந்துள்ளது. நாடுகள் இதை நினைக்கவும் அனுமதியாதிருக்கின்றன. கனடாவில் மே தினம் முதலாம் தேதியில் கொண்டாடப்படுவதே இல்லை. தொழிலாளர் தினமாக அது இன்னொரு நாளில் நினைவுகூரப் படுகிறது. தொழிற்சங்க அமைப்புகளும் இங்கே அபூர்வம். இவ்வாறாக முதலாளித்துவம் சுரண்டலின் முழு எல்லைவரை செல்வதற்கான சகலமும் பூரணப் படுத்தப்பட்டுள்ளன. எனது கவனம் குறிப்பாக இவை மனித ஓய்வுநேரத்தினை விழுங்கிவிடுவதில்தான் குவிகிறது. மேற்குலகில் இந்நிலை அதீதமான வளர்ச்சி பெற்றிருப்பினும், உலகின் எல்லாப் பாகங்களிலும் பெரிதாகவோ சிறிதாகவே இந்நிலையே நிலவுகின்றது. இது வாசகப் பரப்பின் அளவினை மெதுமெதுவாக சீணப்படுத்தி வருவது கண்கூடான நிகழ்வு.

புதினத்தில் நாவலே சிறுகதையின் முன்பு தோன்றியது. பத்திரிகைத் துறையின் தேவையை நிறைவேற்றப் பிறந்த பிறவியென வேடிக்கையாகச் சொல்லப்பட்டாலும் அதில் உண்மை இல்லாமலில்லை. சென்ற நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தில் தோன்றிய மகாநாவல்கள் இன்று வழக்கிறந்துவிட்டன. இன்றைய மலையாள இலக்கியத்தில் ‘மைக்ரோ நாவல்கள்ஷதான் பிரபலம். இரண்டு பாரங்களில், சுமார் 32 பக்கங்களில் அமைந்துவிடுகிறது இந்த நாவல். இதையும் நேரமின்மையின் உண்மையின் பின்னாலுள்ள வாசிப்புச் சாத்தியத்தை ஊடாடி நிற்கிறது என்பதே என் அனுமானம்.

எது எப்படியிருப்பினும், தமிழ் நாவல் இலக்கியம் தரமான படைப்புக்களைக் கொண்டிருப்பதோடு இனி வரும் காலம் உலகத் தரத்துக்கான ஆக்கங்களை உருவாக்கும் என உளமார நம்புகின்றேன்.


0000

(இக் கட்டுரை வைகாசி 2014இல் ஸ்கார்பரோ, கனடா, மெய்யகத்தில் நடைபெற்ற மாதாந்த இலக்கியக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.)






Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு: