Posts

Showing posts from March, 2016

நினைவேற்றம் (முன்மொழிவு)

  நினைவேற்றம் முன்மொழிவு: கதி மாற்றமற்ற காலத்தின் சீரான நகர்ச்சியில் சந்தோஷங்களுடனும், துக்கங்களுடனுமான மனித வாழ்க்கைமட்டும்தான் ஊர்வதாகவோ பறப்பதாகவோ தோற்றம் காட்டி நிற்கிறது. வாழ்வை வாழ்வதற்கும், கழிப்பதற்குமான எல்லைக்கோடுகள் வேறுவேறானவையாகவே இருக்கின்றன. வாழ்ந்தேனா, கழித்தேனா என்ற கேள்விகளுக்கப்பால் எல்லைக்கோடுகளின் விதித்தல்பற்றியே நிறைய நான் சிந்தித்திருக்கிறேன். பதில் கிடைத்த அப்போதும்  எல்லைக்கோடுகள் தாண்டமுடியாதவையாகவே இருந்திருக்கின்றன. இவை பல வேளைகளில் விண்டுரைக்க முடியாத விரக்தியின் உச்சம்நோக்கி என்னை நகர்த்தியிருக்கின்றன. மன விரக்திகள் மிக மோசமாக அழுத்துகிறபோது  சமூகத்தின்மீதான கோபமாகவும், அதன் பிரதிநிதிகளாய் நின்று வாதித்து என்னை உபாதிக்கும் குடும்பத்தினருடனான ஒட்டுவிடுதலாகவும் அது பரிணமித்து என்னை எங்கோ எங்கோ தொலைத்துவிடுகிற சந்தர்ப்பங்கள் எனக்குப் பல்வேறு தடவைகளில் நேர்ந்திருக்கின்றன. அச் சந்தர்ப்பங்களிலும் கவுதமனுக்கு ஒரு திரிமாபோல, எனக்கு ரோஸ்களும், தயாவதிகளும், எமிகளும் இருக்கவே செய்திருக்கிறார்கள். இத்தகு கணங்கள் மிகப் பெருமைப்பட முடியாதவையாக இருந்தபோதும், எ

நினைவேற்றம் 1

நினைவேற்றம் முனை 1 நீண்டு நெடும் பாம்பாய்க் கிடக்கிறது மக்கித் தெரு. சோளகம் சருகுகளை உருட்டிச் சென்றுவிட்ட கான்கள், புல்களும் புதர்களும் காய்ந்து சுருங்கிய நிலையில், வெறுமையாய்க் கிடக்கின்றன. காற்றினால் அகற்றப்பட முடியாது எஞ்சிப்போன சுள்ளிகளும் தடிகளும், பிறகொருநாள் கோடை பிறந்துவிட்ட அந்தப் பருவகாலத்தில்  தீ வைத்துச் சாம்பலாக்கப்படலாம். மாரியில் வெட்டப்பட்ட வேலி மரங்களில் பசுமை செறித்து வளர்ந்திருந்த இலைகளில் மக்கி அப்பி பழுப்பாய்த் தோன்றுகின்றது. கோடையினை அக் கிராமத்தின் வெறித்த பருவமாய் உணர்விலெழுப்ப, மக்கித் தெரு இணைத்து மேற்கிலும் கிழக்கிலுமாய்க் கிடந்த வயல்வெளிகளின் தரிசு மட்டுமில்லை, வயல்வெளிகளில் ஒழுங்கைகளில் தம்பாட்டுக்கு  காய்ந்த புல் சருகுகளில் தம் பசியாற்ற அவிழ்த்துவிடப்பட்டிருந்த ஆடுகள் மாடுகளின் அலைவும் மட்டுமில்லை, தெருக்கள் ஒழுங்கைகளில் அரிதுபற்றிப் போன மனித நடமாட்டமும், இன்னும் அடுக்களைகளின் கூரைகளைத் துளைத்துக்கொண்டு அடுப்புப் புகை மேற்கிளம்பாத  அசைவிறுக்கமும்கூட பொருந்திய காட்சிகளாக இருந்தன. யாழ்ப்பாணம் கிடுகு வேலிக் கலாசாரத்தைக் கொண்டிருந்தாய்ச் சொல்லப்படுகிற

‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ பதில்மறுப்பு…

‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக ‘யோசிப்பும் வாசிப்பும்’ பகுதியில் வந்த  வ.ந.கிரிதரனின் எதிர்வினைக்கான எனது பதில்மறுப்பு… வணக்கம், கிரிதரன். ‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக நீங்கள் எழுதிய எதிர்வினையை ‘பதிவுக’ளில் பார்த்தேன். பொதுவாக உரைக்கட்டுசார் விஷயங்களுக்கான எதிர்வினைகள் வருவது ஆரோக்கியமானது என்பதே எனது கருத்தாக என்றும் இருந்துவருகின்றது. அது குறித்து என்வரையில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் எதிர்வினையாக மட்டுமே அது இருந்திருந்திருந்தால் அதற்கு இவ்வாறான ஒரு பதில்மறுப்பு என்னளவில் அவசியமில்லாமலே இருந்திருக்கும். ஆனால் நீங்கள் சுமத்தியது ஒரு குற்றச்சாட்டு அல்லவா? என் வாசிப்பின் மீதான உங்களது அவநம்பிக்கையை என்மேல் சுமத்திய ஒரு குற்றச்சாட்டாகவே அதை என்னால் பார்க்க முடிகிறது. அக் குற்றச்சாட்டின் பதில்மறுப்பிற்காக உரைக்கட்டினைவிட கடித வடிவம் சிலாக்கியமாகப்பட்டதில் இவ்வாறு எழுத நேர்ந்திருக்கிறது. என் வாசிப்பின் போதாமையை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள், கிரிதரன்? எமது நேரடிப் பேச்சில் பலமுறையும