கனடாவில் இலக்கியச் சஞ்சிகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…






பிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்கிறது. தான் அலைவுற்ற வழிநெடுகிலும் கண்ட துன்ப துயரங்களின் வடிகாலாக அது எழுத்தையே கதியென நினைக்கிறது. பிறந்த நாட்டில் இனவழிப்பு மூர்க்கமாகச் செயற்படுத்தப்படும்போது உயிரபயம் கேட்டுவரும் அச் சமூகம், குடிபுகுந்த மண்ணில் தம் வாழ்விருப்பை உறுதிப்படுத்தும் அவசியம் நேர்கிறபோது அது தனக்கான ஒரு அரசியலையும், அதற்கான கருத்துநிலைகளையும், சமூக கட்டமைப்புக்கான வழிமுறைகளையும் எழுத்தின்மூலமே வகுத்துக்கொள்வதுதான் காலகாலமாக புலம்பெயர் சமூகங்களின் செயற்பாடாக இருந்து வந்திருக்கிறது. அது தன்னை உரசிப் பார்க்க ஒரு தளம் வேண்டியிருக்கிறது. அது எழுத்தூடகமான பத்திரிகைகள், சஞ்சிகைகளாக இருக்கிறது.

அரசியல்ரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் தம்மிருப்பை எழுத்தூடகமான பத்திரிகை சஞ்சிகைகளில் அது பயில்வு செய்யும்போது, பத்திரிகை சஞ்சிகைகளுக்கு  சொந்த மண்ணிலிருந்த பொறுப்பையும் தேவையையும்விட மிகக்கூடுதலான பங்காற்றுவது தவிர்க்கமுடியாதது.
இலங்கைத் தமிழ் மக்களின் புலப்பெயர்வு 1983இன் பின்னாக வெகுவாக அதிகரித்தபோது, அதன் மையம் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், மே.ஜேர்மனி, இங்கிலாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய தேசங்களாகவே  இருந்திருக்கின்றன என்பதையும், பின்னால் ஐக்கிய அமெரிகா, கனடா, அவுஸ்திரேலிய நாடுகளும் புகலிட வாய்ப்புக்கொண்ட தேசங்களாக அமைந்தன என்பதையும் கவனம்கொண்டு பார்க்கையில், பிரான்ஸ், ஜேர்மனி ஆதிய நாடுகளில் முதன்முதலாகவும், அதிகமாகவும் பத்திரிகையோ சஞ்சிகையோ தோன்றி வளர்ந்த சாத்தியத்தை நாம் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். இதில் நாம் கவனம் விலகிவிடக்கூடாது.

தொண்ணூறுகளிலிருந்து அமெரிக்க நாடுகளும் அவுஸ்திரேலியாவும் புலப்பெயர்வுக்கான சாதகமான நிலைமையைக் கொண்டிருக்க, தமிழர் குடியேறுதல்கள் அங்கேயும் அதிகரித்தன. அங்கேயும் சஞ்சிகைகளின் உதயம் உருவாகிற்று. கனடா மொன்றியலிலிருந்து  வெளியான ‘பார்வை’, ரொறன்ரோவிலிருந்து வெளியான ‘தேடல்’, ‘நான்காவது பரிமாணம்’, ‘தாயகம்’ போன்றவற்றை ஏகதேச உதாரணங்களாகச் சொல்லமுடியும்.
புலம்பெயர் நாடுகள் எதனையும்விட கனடாவிலேயே இலங்கைத் தமிழர் மத்தியிலிருந்து அதிகமான பத்திரிகைகள் சஞ்சிகைள் வெளிவந்திருப்பதாய் அறியக்கிடக்கின்றது. அவற்றின் தொகை 39 ஆக இருந்ததை ஒரு கணிப்பீடு (அலைவும் உலைவும், சு.குணேஸ்வரன், பக்:51) தெரிவிக்கின்றது. இத்தொகையுள் அப்போது கனடாவிலிருந்து வெளிவந்த ‘அறிதுயில்’, ‘உரைமொழிவு’, ‘மற்றது’, ‘வைகறை’, ‘அற்றம்’போன்ற இதழ்களும் பத்திரிகைகளும் அடங்கினவாவென்பது தெரியவில்லை. எனினும் சற்றொப்ப இவற்றின் தொகையை நாற்பதாக வைத்துக்கொண்டாலும் இத்தொகை அதிகமானதுதான்.

புத்தாயிரத்தின் முதலாவது தசாப்தம் மிக்க வீறாகவே தொடங்கியதாகச் சொல்லமுடியும். இலங்கையில் நடைமுறையிலிருந்த யுத்தநிறுத்தம் இங்கேயும் சலனமற்ற மனநிலையை மக்கள் மத்தியிலே உருவாக்கியிருந்தது. ‘அற்றம்’, ‘மற்றது’போன்ற காத்திரமான சஞ்சிகைகள் தோற்றமெடுத்தது இக்காலப் பகுதியில்தான். ஆனால் இது வெகுகாலம் நீடிக்கவில்லை. இலங்கையில் 2006இல் தொடங்கிய இறுதிப்போரின் பேரோசை கனடாவரை வந்து தமிழ் மக்களை அதிரவைத்தது. தம் உறவினரை நண்பரை இன்னும் தம் பூர்வீக மண்ணில் கொண்டிருந்த பல தமிழ்க் கனடியருக்கு உறக்கமற்றதாய் இரவுகளாயின. ஒவ்வொரு கோட்டையின் இழப்பிலும் மனம் துவண்டார்கள் அவர்கள். 2009இல் பேரழிவோடு அப்போர் முடிவுற்றபோது அவர்கள்மேல் விழுந்த சோகம் மிகப் பாரியதாக இருந்தது. இனவெழுச்சிக் கீதங்களும் அரங்காடல்களும் ஊர்வலங்களும் நடத்திக்கொண்டிருந்த சமூகம் ஒரு ஸ்தம்பிதத்தில் உறைந்துபோனது. அதிலிருந்தான மீட்சி ஒருபோது மக்களில் வந்தபோதும், சஞ்சிகையுலகில் அது அரிதாகிப்போனது.  

புத்தாயிரத்தின் இரண்டாவது தசாப்தம் முடியவிருக்கிற இன்றைய நிலையில் ஏனைய நாடுகளைவிட தமிழர் தொகை அதிகமாயுள்ள கனடாவிலேயே மிகக் குறைந்தளவான சஞ்சிகைகள் வெளிவருவதைப் பார்க்கிறபோது, சஞ்சிகைகளின் வெளிப்பாட்டிற்கும், அவற்றின் தொடரியக்கத்திற்கும் தமிழர் வாழ்நிலைமையோடாக மிகுந்த தொடர்பிருப்பதைக் காணமுடிகிறது. இதை ஓரளவு ஆச்சரியம் தருகிற உண்மையாகவே கருதவேண்டியிருக்கிறது.

ஆரம்ப காலத்தில் சஞ்சிகைகளின்  எழுச்சிகளும், தற்போதைய அவற்றின் வீழ்ச்சிகளும் குறித்து மேலோட்டமாகவேனும் ஒரு கணிப்பீட்டை புலம்பெயர் சமூகத்தைப் பொதுமையாகக்கொண்டும், கனடாத் தமிழ்ச் சமூகத்தை மையப்படுத்தியும் மேலோட்டமாகவேனும் செய்ய இவ்வுரைக்கட்டு முயலும்.

1985இல் ஜேர்மனியில் தோன்றிய முதலாவது புலம்பெயர்ந்தோர் சஞ்சிகையான ‘தூண்டில்’ தொடங்கி, பிரான்ஸில் வெளிவந்த ‘அம்மா’, ‘எக்ஸில்’, ‘உயிர்நிழல்’, ‘சமர்’ ஆகியவற்றுடன் தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் ‘ஆக்காட்டி’ ஈறாக, கனடாவில் வெளிவந்த ‘வைகறை’, ‘உலகத் தமிழர்’, ‘அற்றம்’, ‘ரோஜா’ போன்றவற்றுடன் இப்போது வெளிவந்துகொண்டிருக்கும் ‘காலம்’ வரைக்குமான புலம்பெயர் சமூகத்தின் இதழ்கள் பத்திரிகைகளினைக் கணக்கிட்டால் 150க்கு மேலாக அதன் எண்ணிக்கை வரும்.

புலம்பெயர் நாடுகளினது பொதுப்புலத்தில் வைத்தே கனடா சஞ்சிகைகளின் எழுச்சி வீழ்ச்சிகளில் இவ்வுரைக்கட்டு கவனம் குவிக்கப் போகின்றதானாலும், இது தவிர்க்க முடியாதவகையில் தமிழகத்து நிலைமையோடு புலம்பெயர்ந்த நாடுகளின் நிலைமைகளை இனங்காண முனையும். அவ்வாறு செய்வது தவிர்க்கமுடியாததுமாகும்.
ஒரு பொதுநீரோட்டத்தோடு இணையமுடியாத தருணத்திலேயே ஒரு சிற்றிதழ் தோன்றுகிறது. அது ஒரு கலகத்தின் குரலாகக் கருதப்படுகிறது. அது கருத்துநிலை சார்ந்ததாகவே பெரும்பாலும் உருக்கொள்கிறது. ஆரம்பிப்பவரது அல்லது ஆரம்பிக்கும் குழுவினது கருத்துநிலைகளதும், புதிய வகையினங்களினதும், இலக்கியப் பரீட்சார்த்தத்திற்குமான வெளியில் அதன் தோற்ற நியாயம் இருப்பதாக தமிழகத்து விமர்சகரும், படைப்பாளியுமான க.நா.சுப்பிரமணியன் கூறுவது மிகச் சரியானதேயானாலும், தமிழக நிலைமைகளோடு புலம்பெயர் சமூக நிலைமைகளை சமமாக ஒப்பிட்டுவிடக் கூடாதென்ற அவதானமும் எங்களுக்கு வேண்டும்.

தம் சொந்த மண் நீங்கி கலாசாரம், சீதோஷ்ணம் ஆகியவற்றில் முற்றாக வேறுபட்ட இன்னொரு மண்ணில் தஞ்சமடைந்தவர்களுக்கு மனநிலையின் வெளிப்பாட்டுக்கான, அவதிகளின் விடுவிப்புக்கான ஒரு தளம் பிரதானமாய்த் தேவைப்பட்டது. கருத்துநிலை பின்னாலேயே தொடர்ந்தது. தம் பொருளாதார நிலைமைக்கேற்ப மிகச் சிறிய வெளிப்பாட்டுச் சாதனங்களுடன் அவர்கள் எழுத்துக் களத்தில் இறங்கினார்கள். ‘தூண்டில்’, ‘காலம்’, ‘ரோஜா’, ‘அம்மா’, ‘உயிர்நிழல்’, ‘தாயகம்’ எல்லாம் அவ்வாறு தோன்றியவையே.

நிறுவனம் சார்ந்தன்றி, தனிமனிதர்களின் முயற்சியயினாலேயே இவற்றின் தோற்றம் சாத்தியமாயினவென்பது இங்கே முக்கியம். இவற்றில் அரசியலை முதன்மைப்படுத்தியவை தனிரகமானவை. பிரான்ஸில் ‘சமர்’, கனடாவில் ‘உலகத் தமிழர்’, ‘முழக்கம்’ போன்றனவற்றை அவ்வாறு கொள்ளலாம். அவை வெகுஜன வெளிகடந்து வெகுகவனம் பெற்றிருக்கவில்லை. தனிமனித சுயபிரசித்திக்கான, சுயலாபத்திற்கான வழித் தடத்தில் இயங்குபவையாகவும் சில பத்திரிகைகள் சரியாகவே அடையாளம் காணப்பட்டன. அரசியல் கருத்துநிலையோடும் கலை இலக்கிய கரிசனைகளோடும் முன்னெடுக்கப்பட்டவை கவனம் பெற்றதோடு, சமூகரீதியாகவும் இலக்கியரீதியாகவும் கணிசமானவளவு நன்மை புரியவும் முடிந்தது. மேலும் ‘அம்மா’,போன்றோ  ‘அற்றம்’போன்றோ ‘கண்’போன்றோ ‘அறிதுயில்’போன்றோ அதிகமானவையும் தோன்றிடவில்லை.

தொண்ணூறுகளிலிருந்து தொடங்கிய இவ்வளர்ச்சி இடையிலே ஒரு தேக்கநிலையைக் கொண்டிருந்ததை நாம் முன்னர் பார்த்தோம். இக்காலம் அரசியலுக்கான காலமாக இருந்ததென்பதையும் கண்டோம்.
வெளிப்பாடு, கருத்து நிலைமைகளில் மிக்க அரசியல் தீவிரம்கொண்ட சிறுசஞ்சிகைகளின் வரவு முக்கியமானது. இவை போராட்ட இயக்கம் சார்ந்த, அரசியல் பிரக்ஞையுள்ள தனிமனிதர் சார்ந்த இரண்டு கிளைகளாக பரிணமித்ததை மறக்கக்கூடாது. போராளி இயக்கங்களின் சஞ்சிகைகள் மிக இறுக்கமான அரசியல் பேசின. தனிமனித முயற்சிகளால் வெளிவந்த பத்திரிகைகள் சஞ்சிகைகள் அரசியலோடு இலக்கியமும் பேசின. நீடு துயிலில் கிடந்த அறவுணர்ச்சியினை தட்டியெழுப்ப இலக்கியார்த்தமாய் அவை அனைத்தும் புரிந்தன. சிற்றிதழ் வகைமைக்குள் அவற்றையே நாம் வகுக்கமுடியும். ஆனாலும் புத்தாயிரத்தின் இரண்டாம் பத்து அவற்றின் வீழ்ச்சியை வெகுவாகத் துரிதப்படுத்தியது.

புத்தாயிரத்தின் மிக்க வலுவான ஊடகமாக மின்னிதழ்கள் வரத் தொடங்கியதை முக்கியமானதாகக் கருதலாம். இது வெளிபாட்டுக்கான அவதியை இல்லாது ஒழித்தது. மிகக் குறைந்த பொருளாதாரத்தோடு சர்வதேச வியாபகத்தில் ஒரு மின்னிதழை மிகக் குறுகிய காலத்தில் வெளியிடும் வசதியானது காலத்தின் தேவையை கணிசமானவளவு நிறைவேற்றுவதாயிற்று. பதிவுகள் (கனடா), அப்பால்தமிழ் (பிரான்ஸ்)போன்ற இணைய தளங்கள் இக்காலத்தில் வெளிப்பாடாயின. சுரதா, தமிழ்மணம் போன்ற மின்னிதழ்களுக்கு அவை வழி திறந்துவிட்டன.

இவற்றைக்கொண்டு பார்க்கிறபோது அச்சு ஊடகத்தின் வடிவம் பெருமளவு மாறிற்றென்றும், அச்சு ஊடகத்தின் மூலமான சஞ்சிகைகளின் புதுவரவை கணிசமாக அது குறைத்ததென்றும் கொண்டால் மிகையில்லை. பொதுவெளியில் ஏற்பட்ட இத்தகைய நிலைமை புலம்பெயர் தேசங்களிலும் தவிர்க்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தியது.
மிகத் தீவிரமான இலக்கியத் தேடுகையுடன் சிற்றிதழ்கள் தோன்றுகிற காலமாக இது இல்லாதிருந்த பொழுதிலும் பிற புலம்பெயர் நாடுகளில் உதாரணமாக பிரான்ஸில் ஆக்காட்டிபோல தோன்றவே செய்தன. கனடாவை மையப்படுத்திய கூர் ஆண்டு தோறுமான தொகுப்பாக வரத் தொடங்கியமையும் இக்காலப் பகுதியிலேதான் நடந்தது. மின்னூடக வசதி பல்வேறு காரணிகளால்  அச்சு ஊடக புத்திதழ்களின் வருகையை வெகுவாகக் குறைத்ததென்பதை மறுக்க முடியாது.

மேலும் ஆரம்ப காலத்தில் சிற்றிதழ்களை முன்னெடுத்தவர்களின் வயது இருபதுகளிலிருந்து ஐம்பதுகளாகி விட்டிருந்தது. பெரும்பாலான படைப்பாளிகளும் வெளியீட்டாளர்களும்கூட குடும்ப வலயத்துள் முற்றுமாய் மறைந்துபோயிருந்தனர். இந்த முப்பது ஆண்டுகளில் புலம்பெயர்ந்தவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் அந்தந்த நாட்டு குடிமக்களாகவும் ஆகிவிட்டிருந்தனர். அது வாழ்வியல் முறை, சிந்தனைகளென சகலவற்றையும் அடியோடு மாற்றும் விசையாகியது. பொதுவாக புலம்பெயரந்த நாடுகளின் நிலைமை இதுவேயெனினும் கனடாவில் இவற்றின் இறுகிய தாக்கத்தைக் காணமுடிந்தது.

இங்கிலாந்து பிரான்ஸ் போன்றவை நீண்ட பூர்வீக வரலாறுடையவை. இத் தேசங்களில் அடுக்கு மாடிக் குடிகளிலும் நெருங்கிய குடிமனைப் பகுதிகளிலுமே புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் குடியிருக்க முடிந்திருந்தது. தனக்கான ஒரு கூடு என்பது ஐரோப்பிய தேசங்களில் இவர்களுக்கு கனவாயிருந்தது. கல்விப்புலம், தொழில்நுட்ப அறிவு வாய்ந்தவர்கள் விஷயத்தில் ஓரளவு இது அனுகூலமாயிருந்தது என்பது உண்மையே.  ஆனால் கனடா என்கிற புதிய தேசம் அவர்களுக்கு ஒரு பெரு வெளியைத் திறந்துவிட்டிருந்தது. ஒரு கூடு எவருக்கும் அவசியமென்பதைக் கூறிய அதன் மிகக்கூடிய சீதள நிலைமை, எல்லோர்க்கும் அடுக்கு மாடியிலாவது ஒரு கூட்டை அவசியமாக்கியிருந்தது.

இங்கேயும்கூட வசதியற்றோரின் தெருவோரக் குடியிருப்புகள் மிக அருகியேனும் இருக்கிறதென்றாலும் அப்படி வாழ்தல் பெரும்பாலானவர்களுக்கு சாத்தியமே இல்லாதிருந்தது. குளிர் காலத்தில் அவர்களுக்கான ஒதுக்கிடத்தை அரசாங்கமே வழங்கியது. வாழ்வு தொலைத்தவர்களின் அவ்வாறான வாழ்முறை, வாழ்வைத் தேடி வந்தவர்களால் அனுசரிக்கப்பட முடியாதது. அதனால் பலரின் தாகமும் அடுக்கு மாடியிலாவது ஒரு குடியிருப்பெனவே ஆகியிருந்தது.
அதற்குச் சாதகமான நிலைமைகள் இங்கே இருந்தன. அதன் மிகப் பரந்த வெளியும், புதிய கட்டுமானங்களும், புதிய நகர்களின் உருவாக்கமும், வீட்டு வங்கிக் கடன்களை அடைதலின் விதிமுறைகள் தளர்வாகவும் இருந்துவிட தமிழ் மக்கள் வீடு பேறடைந்தார்கள். தீவிர வாசகர்கள், படைப்பாளிகள், வெளியீட்டாளர் யாரும் இந்த சூழ்நிலையில் புதிதாக உருவாகாதது மட்டுமின்றி, இருந்ததிலும் குறைவுபட ஆரம்பித்ததின் புள்ளி இங்கே இருக்கிறது. அவர்களது பெருமளவு நேரத்தை வீட்டுக் கடன் உறிஞ்சிக் குடித்தது. ஒரு வாகனத்தின் அவசியம் காப்புறுதி என்கிற பெயரால் மேலும் ஒரு பளுவை அவர்கள்மேலேற்றியது. வாழ்முறை சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றம் இனி முதற்கொண்டு இந்நிலைமையை இன்னும் சீணிக்கவே செய்யும் என்பது வெளிப்படையாயிற்று.
கருத்துத் தீவிரமோ படைப்பு மனநிலையோ அற்றிருந்த இச் சூழ்நிலை படைப்புக்கு உகந்ததாக இருக்கமுடியாது. இதில் சஞ்சிகையென்பது ஒரு கேள்வியாக மட்டுமே இருந்தது.

அதேவேளை அதி முக்கியமானதும் இறுதியானதுமான காரணத்தை இனி அலசவேண்டும்.

கனடாவில் தற்பொழுது சுமாராக பத்து பத்திரிகைள் வெளிவந்துகொண்டு இருக்கின்றதாகக் கொண்டால், அவை அனைத்துமே விளம்பரங்களின் மூலம் ஜீவிப்பவையாய் இருக்கின்றன. அனைத்துமே இலவசப் பத்திரிகைகளாக இருக்கின்றன. இலக்கியார்வத்தோடு வெளிவரும் ஒரு சிறு சஞ்சிகை தனக்கான விலையோடு வருகையில் இலவச பத்திரிகைகளுடனான ஒரு யுத்தத்தையே அவற்றால் புரியவேண்டி நேர்கிறது. விறபனையை தனிநபர் ரீதியிலானதாக செய்கையில் இவற்றுக்கு வாழ்நாளும் பெரிதாக நிலைப்பதில்லை. பொருளாதார ரீதியிலான இப்பாதிப்பு பல சிற்றிதழ்களுக்கு நேர்ந்திருக்கிறது. ‘ழகரம்’, ‘நான்காவது பரிமாணம்’, ‘உலக தமிழோசை’ போன்ற இதழ்களுக்கும் ‘வைகறை’போன்ற காத்திரமான பத்திரிகைகளுக்கும் நேர்ந்தது இதுதான்.
இந்தப் புள்ளியிலிருந்து கிளை பிரியும் இன்னொரு அம்சத்துக்கு ஒரு விளக்கமுண்டு. கனடாவில் வெளிவந்த ‘வைகறை’ தன் அரசியல் சமூகப் பிரக்ஞையோடு ஆழமான இலக்கிய கரிசனமும் கொண்டிருந்தது. சிறுகதை, பத்தி எழுத்துக்கள், கவிதைகள் எனவும் இலக்கியவாதிகளின் நேர்காணல்களெனவும் குறிப்பிடக்கூடிய கலை இலக்கிய வெளிப்பாடுகளை அது செய்தது. தற்பொழுது வெளிவரும் ‘தாய்வீடு’ ‘விளம்பரம்’ போன்றனவற்றின் செயற்பாடும் இவ்வண்ணமே இருக்கின்றது. துல்லியமான தரவுகள் தந்து சமூக, அரசியல், இலக்கியப் புலத்தில் இயங்குவதில் ‘தமிழர் தகவ’லுக்கும் ஒரு கணிசமான இடம் இதிலுண்டு. இவ்வாறாக இவை ஒரு சிற்றிதழின் வேலையையும் தம்மேலேற்றியுள்ளதின் மூலம் ‘அற்றம்’, ‘மற்றது’ போன்ற காத்திரமான சிற்றிதழ்களின் பணியினை பகுதியாகவேனும் ஆற்றிவிடுகின்றன. ‘அற்ற’மோ ‘மற்றது’வோ செய்த அதே பணியென இதை அறுதியாகக் கூறமுடியாதெனினும் அவற்றிற்கான இடைவெளிகளில் இவை நிழலையாவது பரத்தி நிற்கின்றன.

ஒரு காலத்தில் இலங்கையில் ‘தினகர’னும், ‘செய்தி’யும், ‘மறுமலர்ச்சி’யும், ‘ஈழநா’டும், ‘சுதந்திர’னும் செய்த மாதிரியென இதைச் சொல்லமுடியும். ஒரு சிறு அமைப்போ பெரு நிறுவனமோ சார்ந்து இயங்குவதிலுள்ள வெளிப்பாட்டு வசதி தனிமனிதர்களின் ‘அலை’ போன்ற சிற்றிதழ்களின்  வருகையையும்  தொடர்ச்சியையும் இலங்கையில் அடித்து நொருக்கினவென்பது வரலாறு. அத்தகைய நிலைமையே இன்று கனடாப் புலத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது என்பது மெய்.
இத்தகையதாக இலக்கியத் தீவிரமற்ற சூழ்நிலையும், கருத்துப் பரிமாற்றத்திற்கான வேறுவேறு முகநூல் வாட்ஸ்அப்போன்ற மின்னூடகங்களின் வருகையும், தம் தேவை கருதியேனும் இலக்கியார்த்தமாக  இயங்குகிற பத்திரிகைகளும் இருக்கிற ஒரு மண்ணில் சிற்றிதழ்களின் நீட்சியோ, புதிய இதழ்களின் வருகையோ பெரிதான சாத்தியத்தைப் பெற்றிருக்கவில்லை.
000

(தமிழர் தகவல், 27வது ஆண்டு மலர் – 2018)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்